* அன்றிலிருந்து இன்றுவரை எவரிற்கும் அடிபணிந்து நாட்டை விட்டு, மக்களை, தமிழ்ப்பற்றை விட்டு ஓடாது எமது மாணவர் கல்வி முன்னேற்றத்திற்கு வழி சமைத்துக் கொண்டிருப்பவர்.
* இவர் தமிழ் தேசத்தை நேசித்த போதும் மாணவரை கல்வி நோக்கில் மட்டும் வழி நடத்தியவர்.
* தமிழ்த் தேசியத்தைத் தீவிரமாக நேசித்ததன் விளைவாக
* 1988 ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் சிறையிலிருந்தவர்.
* 1997 - 1998 காலப்பகுதியில் 4 ம் மாடி, 6 ம் மாடி, மற்றும் களுத்துறைச் சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்தவர்.
* 2008 ம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் விடுதலையானவர்.
* இவற்றைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் புகலிடம் கோரிச் செல்லாமல் - இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தனது குடும்பத்தோடு தாய் மண்ணில் தொடர்ந்து வாழ்பவர்.
*தமிழ் மக்கள் அனுபவித்த அனைத்துப் பிரச்சினைகளையும் தானும் அனுபவித்து அவர்களோடு தொடர்ந்து வாழ்பவர்/////////////
ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற பதம் முற்றாகவே அற்றுப்போய் அபிவிருத்தி என்ற ஒரு மாயை எமது இனத்தை சூழந்து வரும் இந்த வேளையில் தாயகத்தின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் முன்னெடுத்த அபிவிருத்தியின் விளைவுகள் என்ன?
தற்கால அரசியலில் நாம் சந்திக்கப்போகும் பின்னடைவுகள் என்ன என்பது குறித்து ஆதாரங்கள் மற்றும் வரலாற்றுத் தகவல்களை ஒன்று திரட்டி தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் யாழ் மாவட்ட முன்னாள் வேட்பாளரும், பிரபல பொருளியல் விரிவுரையாளருமான திரு சி வரதராஜன் அவர்கள் ஈழம் ஈ நியூஸ் இற்காக (www.eelamenews.com) எழுதும் தொடர் இது.
இலங்கை ஓர் அறிமுகம்
இந்துமா சமுத்திரத்தில் இந்திய உபகண்டத்திற்கு தெற்கே அமைந்துள்ள ஒரு சிறிய தீவு இலங்கையாகும். 1505ல் போர்த்துக்கீசரின் வருகையோடு இத்தீவில் அந்நியராட்சி ஏற்பட்டது. போர்த்துக்கீசரின் வருகையின் போது இத்தீவில் கோட்டை இராச்சியம், கண்டி இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என மூன்று அரசுகள் இங்கு காணப்பட்டன.
இதற்கும் மேலாக வன்னி மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்கள் வன்னித் தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. வன்னியர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பிரதேசங்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லையிலிருந்து கிழக்குக் கரையோரமாக தெற்கே யால – பாணம வரை பரந்திருந்தது. திருகோணமலையும் மட்டக்களப்பும் புவியியல் மற்றும் அரசியல் ரீதியாக ‘வன்னி’ என்று அழைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்புத் தமிழகம் ஆகிய நூல்களை ஆதாரம் காட்டி திருக்கோணஸ்வரம் எனும் நூலில் பின்வரும் விடயம் கூறப்பட்டுள்ளது.
கி.பி.78 காலப்பகுதியில் மனுநேயகயபாகு மன்னனின் ஆட்சிக்குட்பட்டிருந்த திருக்கோவில், உகந்தை, பாணமை, தம்பிலுவில், பொத்துவில் முதலான இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை உன்னரசுகிரி இராச்சியம் என்றும், மண்முணை, மட்டக்களப்பு, போரைதீவு, கொக்கட்டிச்சோலை, முதலிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை மட்டக்களப்பு இராச்சியம் என்றும், வெருகல், தம்பைநகர், கொட்டியாபுரம், தட்சணாகிரி (திருகோணமலை) திரியாய் முதலிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை திருகோணமலை இராச்சியம் என்றும் வகுக்கப்பட்ட மூன்று பெரும் பிரிவுகளை ஈழநாட்டின் கிழக்குப் பகுதி கொண்டிருந்தது.
கி.பி.78 காலப்பகுதியில் மனுநேயகயபாகு மன்னனின் ஆட்சிக்குட்பட்டிருந்த திருக்கோவில், உகந்தை, பாணமை, தம்பிலுவில், பொத்துவில் முதலான இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை உன்னரசுகிரி இராச்சியம் என்றும், மண்முணை, மட்டக்களப்பு, போரைதீவு, கொக்கட்டிச்சோலை, முதலிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை மட்டக்களப்பு இராச்சியம் என்றும், வெருகல், தம்பைநகர், கொட்டியாபுரம், தட்சணாகிரி (திருகோணமலை) திரியாய் முதலிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை திருகோணமலை இராச்சியம் என்றும் வகுக்கப்பட்ட மூன்று பெரும் பிரிவுகளை ஈழநாட்டின் கிழக்குப் பகுதி கொண்டிருந்தது.
1591ல் போர்த்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தின்மீது படையெடுத்து மன்னன் புவிராஜசிங்கனைக் கொன்று அதனைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து தமக்கு ஆதரவான எதிர்மன்ன சிங்கன் என்பவனை யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாக முடிசூட்டினர். 1616ல் இவனின் மரணத்தைத் தொடர்ந்து இரண்டாம் சங்கிலி மன்னன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
இவன் போர்த்துக்கீசரின் ஆதிக்கத்தை ஏற்கமறுத்து அவர்களுக்கு எதிராகப் போராடினான். இதனைத் தொடர்ந்து போர்த்துக்கீசர் சங்கிலி மன்னன் மீது படையெடுத்து 1620ல் அவனைச் சிறைபிடித்து கொழும்பிற்குக் கொண்டு சென்றனர். இதன் பின்னர் யாழ்ப்பாண இராச்சியம் முழுமையாகவும் நேரடியாகவும் போர்த்துக்கலின் முடியாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
1593ல் முதலாம் இராஜசிங்கனின் மரணத்துடன் ஏற்பட்ட சீதாவாக்கை இராச்சியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இத்தீவின் தென்மேற்குக் கரையோரப் பிரதேசம் முழுவதும் போர்த்துக்கீசரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்த தர்மபால போர்த்துக்கீசரின் கைப்பொம்மையாகவே இருந்தான்.
1597ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி தர்மபாலாவின் மரணத்தைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் சட்டரீதியாக கோட்டை இராச்சியம் போர்த்துக்கலின் முடியாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வகையில் யாழ்ப்பாண இராச்சியம், கோட்டை இராச்சியம் என்பன தமது சுதந்திரத்தினை போர்த்துக்கீசரிடம் இழந்தன. கண்டி இராச்சியம் தொடர்ந்தும் சுதந்திர அரசாக விளங்கியது.
போர்த்துக்கீசர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் முழுவதனையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தபோதிலும் தமிழர் பிரதேசங்களையும் சிங்களவர் பிரதேசங்களையும் ஒன்றாக இணைக்கவில்லை. இவ்விரண்டு பிரதேசங்களும் தனித் தனியாகவே நிர்வகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1656ம் ஆண்டு மே மாதம் கொழும்புத் துறைமுகம் டச்சுக்காரரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து இத்தீவில் டச்சுக்காரரின் ஆட்சி ஆரம்பமாகியது. எனினும் முழுமையாகப் போர்த்துக்கீசரை இத்தீவிலிருந்து வெளியேற்றுவதற்கு டச்சுக்காரருக்கு மேலும் இரண்டாண்டுகள் எடுத்தது.
1658ம் ஆண்டு யூன்மாதம் யாழ்ப்பாணம் டச்சுக்காரரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இத்தீவின்மீது போர்த்துக்கீசருக்கு இருந்த கடைசிப்பிடியும் தளர்ந்தது. எனினும் தொடர்ந்தும் கண்டி இராச்சியம் சுதந்திர அரசாக விளங் கியது. டச்சுக்காரர் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களை நிர்வாக ரீதியாக மூன்றாக வகைப்படுத்தினர்.
1. யாழ்ப்பாண நீதி மாவட்டம்
2. கொழும்பு நீதி மாவட்டம்
3. காலி நீதி மாவட்டம்
யாழ்ப்பாண நீதி மாவட்டம் என்பது தமிழர் பிரதேசங்களான இன்றைய வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது. எனவே டச்சுக்காரரும் கூட தமிழர் பிரதேசங்களை இத்தீவின் ஏனைய பிரதேசங்களோடு இணைக்காமல் தனியான நிர்வாகப் பிரதேசமாக வைத்தி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
1
1796ம் ஆண்டு இத்தீவின் கரையோரப் பிரதேசங்களை டச்சுக்காரரிடமிருந்து பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக்கம்பனி கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சி இத்தீவில் உதயமாகியது. திருகோணமலை 1797 ஆகஸ்டிலும், மட்டக்களப்பு செப்டெம்பரிலும், யாழ்ப்பாணம் சில நாட்களின் பின்னரும் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்தது.
குறுகிய காலத்தில் மன்னாரும் அவர்கள் வசமாகி, பிரித்தானியர் கரையோரமாக முன்னேறி வழியில் நீர்கொழும்பைத் தமதாக்கி, கொழும்பிற்கு அண்மையிலுள்ள களனி கங்கையை 1798 பெப்ரவரியில் கடந்தனர். அதே ஆண்டு பெப்ரவரி 15ம் திகதியன்று கொழும்பு வீழ்ந்ததைத் தொடர்ந்து இலங்கையில் டச்சுக்காரரின் ஆட்சி முடிவிற்கு வந்தது.
1815ம் ஆண்டு கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இத்தீவு முழுவதும் பிரித்தானியரின் ஆளுகைக்கு உட்பட்டது. எனினும் ஏனைய பிரதேசங்களைப்போல கண்டி இராச்சிய மக்களும் கண்டிப் பிரதானிகளும் ஆங்கிலேயே ஆதிக்கத்தினை இலகுவில் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆங்காங்கே ஆங்கிலேயே ஆதிக்கத்திற்கு எதிராக எதிர்ப்புக்கள் கிளம்பிய வண்ணம் இருந்தது. வெல்லச என்ற பகுதியில் முஸ்லீம் ஒருவர் மக்கட் பிரதானியாக ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்டார். பிரித்தானியரின் பிரித்தாளும் இத்தந்திரம் கண்டிப் பிரதானிகள் மத்தியில் வெறுப்புணர்வினை ஏற்ப டுத்தியது. இதன் உச்சக்கட்டமாக ஆங்கிலேயே ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு மாபெரும் புரட்சி 1817-1818 காலப்பகுதியில் கண்டிய மாகாணங்களில் வெடித்தது. ஊவா, வெல்லச பகுதிகளிலேயே இப் புரட்சியின் மையம் காணப்பட்டது.
ஆங்கிலேயப் படைகள் எங்கெங்கே சிறுகுழுக்களாக செயற்பட்டு வந்தனவோ அங்கெல்லாம் அக்குழுக்கள் இனங்காணாதவர்களால் திடீர் திடீரெனக் கொல்லப்பட்டனர். கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு அழிக்கமுடியாத நிலையில் ஆங்கிலேயப் படைகள் பொதுமக்களைத் தாக்கியதுடன் அவர்களின் குடியிருப்புக்களையும் அழித்தனர்.
இதன்மூலம் மக்கள் மனதில் பயத்தினை ஏற்படுத்தி அவர்கள் மத்தியில் கெரில்லாப் போராளிகளுக்கு இருந்த ஆதரவினை அழிப்பதற்கு ஆங்கிலேயப் படைகள் முற்பட்டன. இறுதியில் இந்தியாவிலிருந்து படைகளை வரவழைத்தே ஆங்கிலேய ஆட்சியாளரால் இப்புரட்சியினை அடக்கக்கூடியதாக இருந்தது.
அது மட்டுமன்றி இப்புரட்சியினை முன்னின்று நடத்திய கெப்பிட்டிப்பொல என்பவனோடு இணைந்து போராடிய மடுகல்ல என்ற மக்கட் பிரதானி தனிப்பட்ட காரணங்களுக்காகப் பிரிந்து சென்று தனிப்படை ஒன்றை அமைத் தான். இச் செயற்பாடும் இப்புரட்சியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. 1818 செப்டம்பர் மாதமளவில் ஊவா, வெல்லச பகுதிகளை அரசாங் கம் தோற்கடித்ததைத் தொடர்ந்து புரட்சியாளர்கள் மாத்தளை, தும்பறை, நுவரகலாவிய (அனுராதபுரம்) ஆகிய பிரதேசங்களை நோக்கி நகர்ந்தனர்.
1818 ஆம் ஆண்டுக்கலவரமும் அதனைத்தொடர்ந்து மக்கள் எழுச்சி யும் ஆள்பவர்களின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வொன்றினை ஏற்படுத்தியது. இதனால் கொரில்லாப் போர் முறையில் ஆற்றல் கொண்டிருந்த விடுதலை வீரர்களின் புகலிடமாக இருந்த மத்திய மலை நாட்டை ஏனைய பிரதேசங்களுடன் இணைப்பது என அரசாங்கம் தீர்மானித்தது. இவ்விணைப் பினை பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
1820ம் ஆண்டு இலங்கையின் ஆளுநராக பதவியேற்ற திரு. எட்வேட் பார்ண்ஸ் என்பவர் அன்றைய இலங்கையின் முதல் மூன்று தேவைகள் என்ன என்பது பற்றிப் பின்வருமாறு கூறினார்.
முதல் தேவை வீதிகள். இரண்டாவது தேவை வீதிகள். மூன்றாவது தேவை வீதிகள். இன்று இலங்கையில் காணப்படும் பல வீதிகள் இவருடைய காலத்தி லேயே அமைக்கப்பட்டவையாகும். 1821ம் ஆண்டு கொழும்பு – கண்டி வீதி திறக்கப்பட்டது.
இக் கண்டி வீதியிலிருந்து திருகோணமலை, யாழ்ப்பாணம் வரை கிளைகள் திறக்கப்பட்டன. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கோமாரி ஆகிய பிரதேசங்களும், தெற்கே அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி ஆகிய பிரதேசங்களும், மேற்கே களுத்துறை, கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் ஆகிய பிரதேசங்களும் வீதிகள் மூலம் கண்டிப் பிரதேசங்களோடு இணைக்கப்பட்டன.
இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து எந்தவொரு வீதியினையும் ஆங்கிலேயர் அமைக்கவில்லை. கண்டிப் பிரதேங்களை இலங்கையின் கரையோரப் பிரதேசங்களோடு இணைத்து கண்டி இராச்சியத்தின் தனித்துவத்தினை அழித்தொழிப்பதை ஒரு முக்கிய நோக்காகக் கொண்டு ஆங்கிலேயர் வீதிகளை அமைத்தனர்.
இதனால் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களையும் வீதிகளால் இணைக்க வேண்டிய தேவை ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை. ஆனால் இலங்கையின் சுதந்திரத்தின் பின் அரைநூற்றாண்டு கழிந்த பின்னரும் கூட இலங்கை அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் இணைத்து கரையோரமாக வீதியை அமைக்கவில்லை. கண்டி இராச்சியத்தின் தனித்துவத்தினை அழிப்பதற்காகவே கண்டிப் பிரதேசத்தோடு இலங்கையின் ஏனைய பிரதேசங்களை இணைத்து ஆங்கிலேயே அரசாங்கம் வீதிகளை அமைத்தது.
மறுபுறம் தமிழ் இராச்சியத்தின் தனித்துவத்தினை அழிப்பதற்காகவே இலங்கை அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் இணைத்து வீதியை அமைக்கவில்லை. இன்றும் வடக்குக்கும் கிழக்குக்குமிடையிலான வீதிப் போக்குவரத்து சிங்களப் பிரதேசங்களின் ஊடாகவே நடைபெறுகின்றது என்பது கசப்பான உண்மையாகும்.
ஒருபுறம் 1821-1831 காலப்பகுதியில் வீதி அமைப்பினூடாக கண்டிப் பிரதேசங்களை இலங்கையின் ஏனைய பிரதேசங்களோடு இணைத்த ஆங்கி லேய அரசாங்கம், மறுபுறம் நிர்வாகரீதியாக நாட்டை ஒன்றுபடுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. 1820களில் பிரித்தானிய அரசாங்கம் இலங் கையின் நிர்வாகத்தை விசாரிப்பதற்காக ஒரு ஆணைக்குழுவை உருவாக்கத் தீர்மானித்தது.
மேஜர். கோல்புறூக் என்பவரை ஆணையாளராகக் கொண்ட அரச ஆணைக் குழுவொன்று 1928 ஜனவரி 18ம் திகதியன்று நியமிக்கப் பட்டது. கோல்புறூக் இலங்கைக்கு 1829 ஏப்ரல் 11ம் திகதி வந்தார். இவரோடு இணைந்து பணியாற்றுவதற்காக திரு.சார்ல்ஸ் கமறோன் என்ற நீதி நிர்வாக ஆணையாளர் 1830 ஏப்ரல் 30ம் திகதி இங்கு அனுப்பப்பட்டார்.
இலங்கையின் நிர்வாக அமைப்பு, குடியேற்ற அரசாங்கத்தின் வருமானம் என்பன தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ளமாறு கோல்புறூக் பணிக்கப்பட்டார். இலங்கையின் நீதி பரிபாலனம் தொடர்பான அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பு சார்ல்ஸ் கமறோனிடம் விடப்பட்டது.
இவ்விரண்டு ஆணையாளர்களும் 1831 பெப்ரவரி 3ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் இங்கி லாந்து சென்று மூன்று பிரதான அறிக்கைகளை நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தனர்.
1831 டிசம்பர் 24ல் நிர்வாகம் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
1832 ஜனவரி 31ல் வருமானம் பற்றிய அறிக்கையும் .
நீதி நிர்வாகமும் நடைமுறையும் பற்றிய அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டன.
இவ் அறிக்கைகளே கோல்புரூக் – கமரன் சீர்திருத்தங்கள் என அழைக்கப்படுகின்றது.
1833ம்ஆண்டு கோல்புறூக்-கமரன் ஆணைக்குழுவின் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. கோல்புறூக்கினால் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாக முறையினை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமாக 1-10-1833ல் நிர்வாகரீதியாக இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
ஆனால் இவ்வாறு 1833ல் இலங்கை நிர்வாகரீதியாகப் பிரிக்கப்பட்டது என்று கூறுவது தவறானதாகும்.உண்மையில் கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம் மற்றும் வன்னிச் சிற்றரசுகள் என்பன ஐந்து மாகாணங்கள் என்ற பெயரில் 1833ல் ஒன்றிணைக்கப்பட்டது. 1833ம் ஆண்டிலிருந்து இலங்கை ஒரே நிர்வாக அலகாக தொடர்ந்து ஆட்சி செய்யப்படலாயிற்று.
1833ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐந்து மாகாணங்களும் அவற்றின் தலைநகரங்களும் பின்வருமாறு
1. வட மாகாணம் – யாழ்ப்பாணம்
2. கிழக்கு மாகாணம் – திருகோணமலை
3. மேல் மாகாணம் – கொழும்பு
4. தென் மாகாணம் – காலி
5. மத்திய மாகாணம் – கண்டி
2
இவ்வாறான நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கியதற்கான முதற் காரணம் நிர்வாக செயற்திறனை அதிகரிப்பதற்காக இருந்தபோதிலும் அதிக பட்சமான பொருளாதார, அரசியல் நலன்களைப் பெறுவதற்காக, சட்டம் ஒழுங்கு என்பவற்றைக் கொண்டதொரு ஆட்சியை மேலும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காவும் இதைச் செய்தனர்.
1818 ஆம் ஆண்டுக் கண்டிக் கலவரமும் அதனைத்தொடர்ந்து மக்கள் எழுச்சியும் ஆள்பவர்களின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வொன்றினை ஏற்படுத்தியது. இதனால் கொரில்லாப் போர் முறையில் ஆற்றல் கொண்டிருந்த விடுதலை வீரர்களின் புகலிடமாக இருந்த மத்தியமலை நாட்டை ஏனைய பிரதேசங்களுடன் இணைப்பது என அரசாங்கம் தீர்மானித்தது.
இப்பின்னனியிலேயே மாகாண எல்லைகள் வகுக்கப்பட்டன. கண்டி இராச்சியத்தின் பிரதேசங்கள் சிதறடிக்கப்பட்டு, கரையோரப் பிரதேசங்களோடு இணைக்கப்பட்டது. எஞ்சிய கண்டி இராச்சியப் பிரதேசங்கள் மத்திய மாகாணமாக மாற்றப்பட்டது.
1845ம் ஆண்டுவரை இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டி ருந்தது. 1-10-1845ல் மேல் மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1. மேல் மாகாணம்
2. வடமேல் மாகாணம்
1845ம் ஆண்டு வடமேல் மாகாணம் உருவாக்கப்பட்டமைக்கு பின்வருமாறு காரணம் கூறப்படுகின்றது.
சந்தர்ப்பத்திற்கேற்றவாறு அரசியற்காரணங்களுக்காக பழைய கண்டி இராச்சியத்தின் மாகாணப் பிரிவுகளை வேறாகப் பிரிப்பதன் மூலம் கண்டி மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடியும்.
மாகாண எல்லைகள் என்ன அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பதனை இதன்மூலம் அறியமுடிகின்றது. தமது ஆதிக்கத்தினைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களையும் மண்ணையும் பிரித்தாளுவது பிரித்தானியருக்கு கைவந்தகலை. ஆங்கிலேயரிடம் கற்ற இப் பாடத்தினை குருவை மிஞ்சிய சீடனாக இலங்கை அரசாங்கம், தமிழ் பேசும் மக்களையும் அவர்களது மண்ணையும் தந்திரமாகப் பிரித்தாளுகின்றது.
06-09-1873ல் வடமத்திய மாகாணம் உருவாக்கப்பட்டது. வடமாகாணத் திலிருந்து நுவரகலாவிய மாவட்டம் (தற்போதைய அனுராதபுர மாவட்டம்), கிழக்கு மாகாணத்திலிருந்து தமன்கடுவ மாவட்டம் (தற்போதைய பொல நறுவை மாவட்டம்), வடமேல் மாகாணத்திலிருந்து ஏழுகோறளையின் தமிழ்ப்பற்றுப் பிரதேசம் (தெமளப்பற்று) என்பவற்றை இணைத்து வடமத்திய மாகாணம் உருவாக்கப்பட்டது.
05-02-1886ல் மத்திய மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1. மத்திய மாகாணம்
2. ஊவா மாகாணம்
04-01-1889ல் மேல் மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1. மேல் மாகாணம்
2. சப்பிரகமுவ மாகாணம்
இம் மாற்றங்களைத் தொடர்ந்து இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உருவாகின.
3
பிரித்தானியராட்சிக்காலத்தில் தமிழர் பிரதேசங்கள் சிங்களவர் பிரதே சங்களோடு இணைக்கப்பட்ட போதிலும் தமிழர் பிரதேசங்கள் தனிப் பிரதேசங்களாக அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டிருந்தன. பிரித்தானிய குடியேற்ற அரசாங்கத்தில் முதற் செயலதிபராக 1799ல் பதவியேற்ற சேர் எச். கிளைய்கோன் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பத்தில் தீவின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் தமிழர் தாய்நிலம் இருந்ததெனக் குறிப்பிடுகின்றார்.
1827ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் தமிழ் மாவட்டங்கள், சிங்கள மாவட்டங்கள் என இரண்டாகப் பிரித்து சனத்தொகை காட்டப் பட்டுள்ளது. தமிழ் மாவட்டங்கள் என்பதன் கீழ் பின்வருவன உள்ளடக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மன்னார் நெடுந்தீவு
1834ம் ஆண்டு வெளியிடப்பட்ட Ceylon Gazetter என்ற நூலில் தமிழ் பிரதேசங்களும் சிங்களப் பிரதேசங்களும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.
கி.பி.78 காலப்பகுதியில் மனுநேயகயபாகு மன்னனின் ஆட்சிக்குட்பட்டிருந்த திருக்கோவில், உகந்தை, பாணமை, தம்பிலுவில், பொத்துவில் முதலான இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை உன்னரசுகிரி இராச்சியம் என்றும், மண்முணை, மட்டக்களப்பு, போரைதீவு, கொக்கட்டிச்சோலை, முதலிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை மட்டக்களப்பு இராச்சியம் என்றும், வெருகல், தம்பைநகர், கொட்டி யாபுரம், தட்சணாகிரி (திருகோணமலை) திரியாய் முதலிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்தை திருகோணமலை இராச்சியம் என்றும் வகுக்கப்பட்ட மூன்று பெரும் பிரிவுகளை ஈழநாட்டின் கிழக்குப் பகுதி கொண்டிருந்தது.
இரு வேறு தேசியங்கள் மிகவும் புராதன காலத்திலிருந்தே தமக்கான நிலவுடமையினைத் தமக்குள் பிரித்து வைத்திருக்கின்றனர். இவற்றுள் முதலாவதான சிங்களவர் நாட்டின் உட்பகுதியில் அதாவது வளவை ஆற்றிலிருந்து சிலாபம் வரையிலான தெற்கு, மேற்குப் பகுதிகளில் வசித்தனர். இரண்டாவதான மலபார்கள் (தமிழர்) வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தனர்.
இவ்விரு தேசியங்களும் தத்தம் மதம், மொழி, பழக்க வழக்கங்கள் என்பவற்றில் முற்றுமுழுதாக வேறுபட்டவர்கள்.
தமிழர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் வட கிழக்குப் பிரதேசத்தில் வாழ்கின்றனர். மாகம்பற்று – குமுக்கன் ஆற்றினை எல்லையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தைச் சுற்றி புத்தளத்தின் தெற்கு எல்லைவரை அவர்களது மாவட்டங்கள் பரந்திருந்தன.
மாகம்பற்று – குமுக்கன் ஆற்றிலிருந்து வடக்கெல்லையாக சிலாபம் வரையுள்ள கரையோரப் பிரதேசங்களிலும் உட்புற மாவட்டங்களிலும் சிங்களவர்கள் வாழ்கின்றனர்.
1831ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் போது இலங்கையின் சனத்தொகைப் புள்ளிவிபரங்கள் பின்வரும் மூன்று பிரதேசங்களாக வகைப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளன.
சிங்கள மாவட்டங்கள் 448361
கொழும்பு 234791
காலி 88242
தங்காலை 95582
சிலாபம் 29746
தமிழ் மாவட்டங்கள் 213641
யாழ்ப்பாணம் 146528
திருகோணமலை 16335
மட்டக்களப்பு 27574
மன்னார் 20257
நெடுந்தீவு 2947
கண்டி மாகாணங்கள் 288486
இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் வரலாற்றுரீதியாக தமிழர் தாயகமாகவே இருந்து வந்துள்ளது. அரசாங்கத்தினால் மேற்கொள் ளப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் (தமிழர் தாயகத்தின் தென்பகுதியான கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு சிறுபான்மையினராக மாற்றப்பட்டனர் – முதற்தரக் குடிமக்கள் எவ்வாறு இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றப்பட்டனர் என்பதனை அடுத்துவரும் தொடர்களில் பார்ப்போம்.
தொடரும்..
பொருளியல் ஆசிரியர் s.வரதராஜன்
(முன்னைநாள் போராதனைப் பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளர்)
இந்த கட்டுரை தொடர்பான உங்களின் கருத்துக்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:
varatharajaninfo@gmail.com
No comments:
Post a Comment